உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த நாள் முதல் வெளிவராத தகவல்கள் தொடர்பில் முதற்தடவையாக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் 2024 நவம்பர் 24ஆம் திகதி முன்வைக்கப்பட்ட பி அறிக்கையின் ஊடாகவே வெளிவந்துள்ளன என எதிர்க்கட்சி உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நடத்திய ''பிக்பொஸ்'' யார் என்பது தொடர்பிலும், அந்த தாக்குதல் தொடர்பான நீதியை நிலைநாட்ட விடாமல் தடுக்கும் ''பிக்பொஸ்'' யார் என்பது தொடர்பிலும் அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
இதுதொடர்பில் பாராளுமன்றில் கருத்து வெளியிட்ட அவர்,
இதில் முதல் அறிக்கையாக சனல் 4 அலைவரிசைக்கு வழங்கிய அசாத் மௌலானவினால் வெளியிடப்பட்ட தகவல்களாகும். அடுத்ததாக ஆயர் சிறில் காமினிக்கு கிடைத்த வட்ஸ்அப் தகவலாகும்.
இந்த சாட்சிகளுக்கமைய இரண்டு சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டனர். சிவனேசதுரை சந்திரகாந்தன் என்றழைக்கப்படும் பிள்ளையானும், சுரேஷ்சாலே என்பவருமே ஆகும்.
ஆனால் இன்றுவரை இவர்களை கைது செய்வதற்கோ, இவர்களிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளவோ அவர்களை சந்தேக நபர்களாக கைது செய்வதற்கோ குற்றப்புலனாய்வு பிரிவுக்கு முமுடியாமல் போயிருக்கிறது..
அத்துடன் சாரா என்பவர் இறந்துவிட்டதாக காட்டுவதற்கு முன்னெடுக்கப்பட்ட முயற்சிகள் தொடர்பிலும் குறிப்பிடப்பட்டிருக்கின்றன..
ஆனால் இதில் முக்கியமானதாக வவுனதீவில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் கொல்லப்பட்டு அவர்களின் ஆயுதங்கள் கொல்லையடிக்கப்பட்டமை தொடர்பிலும் அந்த ஆயுதங்கள் சஹரான் குழுவினரால் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த பி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் புலனாய்வு பிரிவு அறிக்கையொன்றையும் முன்வைத்துள்ளது. அதில் உளவுத் தகவல்களை வழங்குபவர் ஒருவரின் பெயரும் உள்ளது.
இது தொடர்பில் புலனாய்வு பிரிவு அறிக்கையொன்றையும் முன்வைத்துள்ளது. அதில் உளவுத் தகவல்களை வழங்குபவர் ஒருவரின் பெயரும் உள்ளது.
அவர் தகவல்களை வழங்கியும் புலனாய்வு படையின் கட்டளை அதிகாரி உள்ள சிலரின் பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. அவர்கள் அந்த தகவல்கள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
அதன்படி செயற்பட்டிருந்தால் உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தடுத்திருக்கலாம். இதன்படி உளவு வழங்கியவரின் தகவல்கள் உண்மையானது என்றும் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ள போதும் இது வரையில் அந்த புலனாய்வு அதிகாரிகள் எவரும் கைது செய்யப்படவில்லை.
இதில் தமிழ் மொழிபெயர்ப்புக்காக சென்ற அப்பாவி ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் கிழக்கு மாகாணத்தின் பாதுகாப்பு படை கட்டளை அதிகாரி பாராளுமன்றத்திற்குள் இருக்கின்றார்.
இதேவேளை கடந்த ஜனவரி 7ஆம் திகதி அமைச்சர் ஆனந்த விஜேபால பாராளுமன்றத்தில் கூறுகையில், நாங்கள் அந்த விசாரணைகளை புதிதாக ஆரம்பித்துள்ளதாக தெரிவித்திருந்தார். விசாரணைகளுக்கமைய 12 சிவில் சாட்சியாளர்களும், 7 இராணுவ உறுப்பினர்களும், 26 பொலிஸாரும் அடங்கலாக 48 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறியிருந்தார். ஆனால் கிழக்கு மாகணத்தின் புலனாய்வு அதிகாரி, கட்டளை அதிகாரி ஆகியோரிடம் வாக்குமூலம் பெறுவதை தடுப்பது யார்? நீதிமன்றத்தில் நீதியை நிலைநாட்டுவதற்காக செல்வதை தடுப்பவர்கள் யார்? யார் அந்த பிக் பொஸ், இந்த கள்வர்களை, பயங்கரவாத நடவடிக்கைகளை திட்டமிட்டவர்கள் இராணுவத்தின் அதிகாரங்களை பயன்படுத்தி சஹரானை பயன்படுத்தி தங்களுக்கு தேவையான அரசியல் நாடகங்களை செய்வதற்காக இந்த வேலைகளை செய்யும் அந்த பிக் பொஸ் யார்?
2018 ஒக்டோபர் 26ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்கிரமசிங்கவை நீக்கினார். 2018 நவம்பர் 9ஆம் திகதி வீரவிக்கிரம விபூசன மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர, இரண்டு வாரங்களில் கிழக்கு மாகாணத்தின் இராணுவ கட்டளை தளபதியாக நியமிக்கப்பட்டார். அதன்பின்னர் 3 வாரங்களில் வவுனதீவில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இறந்தனர். அதன்போது முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவர் அதனை செய்தது போன்று நாடகமொன்றை முன்னெடுக்க முயற்சித்தனர். அந்த நாடகத்தை இராணுவ புலனாய்வு பிரிவே தயாரித்தது.
இதேவேளை அருண ஜயசேகர 87ஃ89 காலப்பகுதியில் ஜே.வி.பிக்கு எதிராக இராணுவத்துடன் இணைந்து செயற்பட்டவர். அவருக்கு அதற்கான பதக்கமும் உள்ளது. மஹிந்த ராஜபக்ஷ் பிரதமராக இருந்த போது கிழக்கு மாகாண கட்டளை அதிகாரியாக இருந்துள்ளார்.
2019 நவம்பரில் ஓய்வுபெற்ற அவர், 2023ஆம் ஆண்டில் நீங்கள் அரசாங்கத்திற்கு வரப்போகின்றீர்கள் என்று ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகள் சங்கம் என்று தேசிய மக்கள் சக்தியில் ஆரம்பித்து தேசியப் பட்டியல் ஊடாக பாராளுமன்றம் வந்து பிரதி பாதுகாப்பு அமைச்சராகியுள்ளார். எப்படி இவர் இந்த இடத்திற்கு வந்தார். இதனை செயற்படுத்தும் பிக் பொஸ்யார் என்பது தொடர்பில் அவதானம் செலுத்துமாறு கோருகின்றேன் என்றார்.